போதிதர்மர்

போதிதர்மர் என்பவர் புத்தரின் பிரதான சீடர். ப்ரக்யதாரா என்கிற பெண் துறவியின் உத்தரவுப்படி, இவர் சீன தேசத்துக்குச் சென்றார்.
அவர் சீனத்தை அடைந்ததும், சக்கரவர்த்தி, "வூ' என்பவர் அவரை வரவேற்று உபசரித்தான்.
போதிதர்மரைக் கண்டு அவன் திகைத்து விட்டான். அவர் ரொம்பவும் கொடூரமானவராகக் காணப்பட்டார். அவருடைய பெரிய கண்களில் குரூரம் இருப்பதாக அவன் நினைத்தான்.
தன்னைப் பற்றி மிக உயர்வாக எண்ணிக் கொள்பவன் "வூ' அரசன். அதற்குக் காரணம் இருந்தது. அவனைச் சுற்றியிருந்தவர்களெல்லாம், "தாங்கள் கடவுளைப் போன்றவர், என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்ததுதான்.
ஒருநாள் அரசன் "வூ' போதிதர்மரை பார்த்து, ""நான் மடாலயங்கள் பலவற்றைக் கட்டியிருக்கிறேன். ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்கு உணவு அளித்திருக்கிறேன். புத்தரின் கருத்துகளை ஆராய்வதற்காக, ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியிருக்கிறேன். புத்தரின் சேவைக்காகவே என்னுடைய அரசும், கருவூலமும் இருக்கின்றன. இதற்கெல்லாம் வெகுமதியாக எனக்கு என்ன கிடைக்கும்?" என்று கேட்டான்.
""எதுவும் கிடைக்காது. நரகத்தைத் தவிர" என்றார் போதிதர்மர்.
""நான் என்ன தவறு செய்தேன். நல்லது செய்தவனுக்கு நரகமா? புத்தத் துறவிகள் சொல்கிற புனித காரியங்களை எல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேனே!" என்றான்.
""உன்னுடைய சொந்தக் குரலை நீ கேட்காதவரை யாராலும் உனக்கு உதவ முடியாது. உனக்குள்ளிருந்து ஒலிக்கும் குரலை நீ கேட்டதில்லை. அதைக் கேட்டிருந்தால் இப்படியொரு முட்டாள்தனமாக கேள்வியை நீ கேட்டிருக்க மாட்டாய்," என்றார் போதிதர்மர்.
""பேராசை கொண்ட மனதுக்குப் பிரதியாய் புத்தர் எந்தவொரு வெகுமதியும் தருவதில்லை. புத்தரின் போதனைகள் எல்லாமே ஆசையின்மை பற்றியதுதான்," என்றார்.
தாங்கள் சொல்கிற உள்ளிருந்து ஒலிக்கும் குரலை நான் கேட்டதில்லை. எனக்குள் எழுகிற எண்ணங்களால் ஏற்படும் ஓயாத இரைச்சலில், நான் அதைக் கேட்கத் தவறியிருப்பேன். அந்தவகையில் தாங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்," என்று கேட்டுக் கொண்டான் "வூ' அரசன்.
""அப்படியானால் விடியற்காலை நான்கு மணிக்கு நான் தங்கியிருக்கும் இடத்துக்கு நீ வந்துவிடு. உன்னோடு மெய்க்காப்பாளர்களைக் கூட அழைத்து வரக்கூடாது," என்றார் போதிதர்மன்.
அதிகாலை நான்கு மணிக்கு, "வூ' அரசன் அங்கே சென்றபோது, அவருக்கு முன்பாக போதிதர்மர் அந்த இடத்துக்கு வந்து விட்டார். அவருடைய கையில் கம்பு ஒன்று இருந்தது.
"கம்பை வைத்துக் கொண்டு இவர் எப்படி ஒரு மனதை அமைதிப்படுத்தப் போகிறார்' என்று எண்ணிக் கொண்டான் அரசன்.
""ம்… இந்தக் கோவில் முற்றத்தில் உட்கார்ந்துகொள்," அதட்டலாக கூறினார் போதிதர்மர். அவனும் அப்படியே அமர்ந்தான்.
""உனது கண்களை மூடிக்கொள். உனக்கு முன்பாக எனது கையில் கம்புடன் நான் அமர்ந்திருக்கிறேன். உனது கண்களை மூடிக் கொண்டாயா? அது எங்கே இருக்கிறது என்று கண்டுபிடி. மேலும், மேலும் உள்நோக்கிச் செல். அதை கண்டுபிடித்து, "அது இங்கே இருக்கு' என்று எனக்குச் சொல். மற்றதை என் கையில் உள்ள கம்பு பார்த்துக் கொள்ளும்," என்றார் போதிதர்மர்.
மெய்ப்பொருளை அல்லது அமைதியைத் தேடுகிற எவரும் அத்தகைய அனுபவத்திற்குள்ளாகியிருக்க மாட்டார்.
அரசன் உள்நோக்கிப் பயணித்தான். தன் மனதைக் காண முயன்றான். ஆனால், அதைக் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
"இதோ இருக்கிறது' என்றோ "எதுவுமே இல்லை' என்றோ சொல்வதற்கு அவன் அஞ்சினான்.
மனித சஞ்சாரமற்ற இந்த இடத்தில், போதிதர்மர் என்கிற இந்த அபாயகரமான மனிதன் தன்னை எதுவும் செய்யக்கூடும். சுற்று வட்டாரத்தில் யாரும் இல்லை; தன்னிடம் எந்தவொரு ஆயுதமும் இல்லை. இப்படியான எண்ண ஓட்டம் கலக்கத்தைத் தந்தது, "வூ' அரசனுக்கு.
நேரம் ஓடியது. நிசப்தமான மலைப்பகுதியில் இளங்காற்று வீசியது. சூரிய ஒளி எங்கும் பரவத் தொடங்கியது.
போதிதர்மர் உறுமினார்.
""எவ்வளவு நேரம்… இன்னும் மனதைக் கண்டுபிடிக்கவில்லையா?" என்றார்.
""உமது கையிலுள்ள கம்பைப் பயன்படுத்தாமலே என்னுடைய மனதின் இரைச்சலை அகற்றி விட்டீர்!" என்றான் "வூ' அரசன்.
அவனுடைய முகத்தில் எல்லையற்ற அமைதி காணப்பட்டது.
போதிதர்மர் எதையும் செய்யாமலே அரசனை முழுமையாக மாற்றிவிட்டார்.
""தற்போது நான் புரிந்து கொண்டேன். ஒவ்வொரு செயலும் அதற்கான வெகுமதியைத் தனக்குள்ளேயே கொண்டிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு செயலும் தானே தண்டனையாகி விடவும் கூடும். அவரவர் விதிக்கும் அவரவரே எஜமானர். வெகுமதியோ, தண்டனையோ நம்மையன்றி வேறு எவராம் நமக்குக் கொடுக்கப் படுவதில்லை," என்று சொன்னார், "வூ' அரசன்.
இதைக் கேட்ட போதிதர்மர், ""நீ இங்கே வருவாய் என்று எனக்குத் தெரியும்.நாம் போவதா, வேண்டாமா என்று இரவு முழுக்க உனக்குள் விவாதித்துக் கொண்டிருந்தாய்.
எதுவுமே இல்லாத ஒரு ஏழைக் துறவி நான். என் கைத்தடியைத் தவிர என்னிடம் வேறு என்ன இருக்கிறது? பேரரசனான நீ என்னைக் கண்டு பயந்தது எவ்வளவு கோழைத்தனம். பார், இந்தக் கம்பைக் கொண்டு உன்னுடைய மனதை நான் அமைதிப்படுத்திவிட்டேன்.
ஆனாலும், நீ ஒரு அருமையான சீடன். நான் உன்னை நேசிக்கிறேன். உன்னை மதிக்கிறேன். ஒரே அமர்வில் இந்த அளவு விழிப்புணர்வை வேறு யாரும் அடைந்திருக்க முடியாது. உன்னுடைய இருண்ட மனதில் பேரொளி பரவி விட்டிருப்பதை நான் காண்கிறேன்," என்றார் போதிதர்மர்.
சீனத்தில் இருபது லட்சம் துறவிகள் இருந்தனர். ஆனால், அவர்களுள் நான்கு பேர்களை மட்டுமே தமது சீடர்களாக ஏற்றுக் கொண்டார் போதிதர்மர்.
தம்முடைய முதல் சீடரைக் கண்டு பிடிக்கவே ஒன்பது ஆண்டுகள் ஆயிற்று அவருக்கு. சீடரின் பெயர் ஹூய்-கோ.
"தகுதியான சீடன் தம்மை வந்தடையும்வரை மக்கள் கூட்டத்தைப் பார்க்க மாட்டேன்' என்று கூறியிருந்தார் அவர். ஒன்பது ஆண்டுகளுக்கு வெற்றுச் சுவற்றையே உற்றுக் கவனித்தபடி அமர்ந்திருந்தார் அவர்.
ஹூய்கோ வந்தார். தம்முடைய கையொன்றை வாளால் வெட்டினார். வெட்டுண்ட கையை போதிதர்மரின் முன்பாக வீசி, ""உங்கள் பார்வையை என் பக்கம் (சுவற்றிலிருந்து) திருப்பாவிடில், எனது தலை தங்கள் முன்னிலையில் வந்து விழும். ஆம், என்னுடைய தலையையும் நான் துண்டிக்கப் போகிறேன்," என்றார்.
"நீ தகுதியானவன்; தலையை இழக்கத் தேவையில்லை, நாம் அதைப் பயன்படுத்திக் கொள்வோம்," என்றார் போதிதர்மர்.